Sunday, 31 January 2010

காற்றடிக்கும் காலம்

வேனில் வந்ததால் வேகங்கொண்டுமே
வீசும் காற்றினைப் பாரடா -உயர்
வானில் நின்றநம் மேகந் தள்ளியே
வாழும் காற்றினைப் பாடடா.

தூசு அள்ளியே வீசி வீட்டினினுள்
தூய்மை தன்னையே மாற்றுது - தெரு
மாசு தள்ளியே கூச்சமின்றியே
கூட்டும் வேலையும் பார்க்குது

வட்டக் குடையினை வளைத்து வைப்பதில்
வல்ல சேட்டையை பாரடா - பெண்கள்
சட்டை தூக்கவே பார்க்குதே அதன்
சாதி ஆண்களோ கூறடா?!

திறந்த ஜன்னலை மூடிவைக்கவே
செய்யும் கூலியை கேட்குமா?
பறந்து கூரையின் தகரம் பிய்த்துமே
பாடு படுத்துதே பார்ப்பமா?

சைக்கிள் ஓடவே தள்ளி வருகுதே
தம்பி காற்றினைப் பாடடா!
தைத்து எதிரெனத் தள்ளி நெஞ்சினை
தாக்கும் காற்றினை பாடடா!

வெக்கை குறைத்து நம் வியர்வை ஆற்றவே
வீசும் காற்றது வாழ்கவே
எட்டு மூலையின் பட்டம் வானிலே
ஏற்றும் காற்றது வாழ்கவே!!

08.06.1998

சஞ்சீவி. பிரசுரம் 27 06 1998

Saturday, 30 August 2008

எயிட்ஸ்

எயிட் என்னும் சொல்லின் பொருளை
எழுதினால் தமிழில் உதவி
வைத்தியத் துறையில் இந்நோய்
வருத்தினால் செய்க உதவி

உடலினால் உதவி செய்யின்
உடன்வரும் இந்நோய் என்று
மடமையில் வாழ்க்கை ஓட்டும்
மாந்தரே எழுக இன்று

நோயது கண்ட பலரை
நொடியிலே ஒதுக்கிவைத்தல்
ஆய்கையில் நோயை கூட்டும்
ஆதலால் வெறுக்க வேண்டாம்

அவசரத் தேவை வந்து – காவி
அவர்தரும்குருதி மூலம்
பவத்திலே இந்நோய் பரவி
பலரினை முடித்த துண்மை!

மனைவியை விட்டு வேறோர்
மாதினை நாடிப் போனால்
குணநலன் கெடுவதோடு- நோய்
குருதியில் சேரக்கூடும்

வயதுகள் கூடிப்போனால் - மனைவி
வழியை நீ மாற்று என்றால்- கணவன்
தவறுகள் செய்யச் செல்வான்- அதைத்
தவிர்த்தலே உனது கடமை.

உடலியல் அறிவில்லாது- தப்பு
உணர்வினால் வழிகள் மாறும்
இளம்பயிர் காக்க என்றும்
எடுத்துச்சொல் உடலின் கூறும்.

ஆணொடு ஆண்கள் சேரல்
அவளொடு பெண்கள் புணரல்- அன்று
தேனென இருத்தல் கூடும்!- ஆனால்
தேவையோ உணர்ந்து பாரும்

தொற்றினால் பலநாட் சென்று- நோய்த்
தோற்றத்தை வெளியில் காட்டும்!
மற்றவை போல அன்றிச் சும்மா
மாறியும் திட்டம் தீட்டும்!

ருசிக்கு நீர் பலதைத் தொட்டால்
துன்பமாய் ஆக்க கூடும்.
பசிக்கென ஒன்றை மட்டும்
பாவித்தால், வைரஸ் திட்டும்!!!

ஒழுக்கமாய் வாழ வேண்டும்- வாழ்வில்
ஒருத்தியைச் சுற்ற வேண்டும்- இதனால்
பழுக்கிற வயதில் கூட – நிதமும்
பரவசம் காண ஏலும்!!

14.02.1998

எதிர்ப் பின்னூட்டல்

பனிபெய்ய மழைகொட்டப்
பசும் புற்கள் தலைகாட்ட
கனியொன்று கதைகொள்ளக்
கரம் பற்றும் மனம் மெல்ல

குடைநிழலே கொதியேற்றக்
கொடுவெய்யில் குளிரேற்றப்
படைகொண்ட விழிகொல்ல
பதைப்போடு இவன் செல்ல

படியென் மதிசொல்ல
படு என்று மனம் சொல்ல
துடி என்று அவள் வெல்ல
துடிக்கின்ற இமைதுள்ள

முகம் மீது நகை செய்யும்
முதலான பழம் கொய்யும்
அகம் மீது அன்பூறும்
அதனாலென் உயிர்வாழும்.

காணாமல் போனவர்கள்

முன்பெல்லாம் இங்கு மீசை முளைக்காத இளம் பெடியள்
கண்பார்க்க முன்னாலே காணாமல் போவார்கள்
தோட்டத்திலே செல்லையர் தோளினிலே வெய்யில் பட
வீட்டிலே அவர் பெட்டை விடுகதையாய் மறைந்துவிடும்

இன்னாற்றை பெட்டை இவனோடை ஓடீற்றாம் என்று
அன்னம்மாக் கிழவியின் வாய் அவல் மெல்லத் தொடங்கிவிடும்
பொன்னையர் சுருட்டடித்து புகைபோக்கிக் கதைசொல்ல
கண்காது வைப்பவர்கள்; கடுகதியில் செயற்படுவர்.

முழுதாக ஒரு வருடம் முடிவடைய குழந்தையுடன்
காணாமல் போனவர்கள் கண்ணெதிரே தென்படுவர்
கழுதைகள் எனத்திட்டிக் கை கழுவி விட்டவரும்
அழகான குழந்தையென அன்புடனே அரவணைப்பர்

இப்போதும் பர இளைஞர் இள வயதில் தொலைந்தார்கள்
எப்போது வருவாரோ என ஏங்கிக் காத்திருக்க
அப்பாவும் அம்மாவும் அழுதபடி வீற்றிருக்க
உப்பாற்று வெளிதனிலே உடலாகக் கிடைப்பார்கள்

காதலனைக் காணாமல் கன்னியவள் தவமிருக்க
மோதலிலே இறந்தவிட்ட மூத்தஒரு தலைவரென
சாவுகளின் பின்னர்கூடச் சரித்திரங்கள் மாற்றப்பட
வேதனையின் விளிம்பினிலே வெம்பிடுவாள் பேதையவள்.

பாண்வாங்க தெருமீது படியிறங்கிச் சென்றவர்கள்
மீன்பிடித்து கடல்மீது மிடி தீர்க்கச் சென்றவர்கள்
கான் கரையில் பெண்களுக்குக் கடுப்பேத்தும் வாலிபரும்
காணாமல் போனார்கள் எக் கடன்தீரச் சென்றார்கள்?

செய்தவனை விட்டுவிட்டு சேர்ந்தவனைச் சிறையடைக்க
செய்த வினை என்னவென்று தெரியாமல் அவன் முழிக்க
கைதுகளும் களவுகளும் காட்சிகளாய் முன்விரிய
பைந்தமிழர் முற்பிறப்பில் பாவந்தான் செய்தாரோ?!

தொலைந்தவரின் முகவரியை தேடுபவர் நாளெல்லாம்
அலைந்ததுவே கண்ட மிச்சம் அது தவிர உருப்படியாய்
காணாமல் போனவரைக் கண்டறியச் சென்றவர்கள்
காணாமல் போவதுதான் கடைசியிலே வரலாறா?

Tuesday, 12 August 2008

நானும் இராமன்தான்!

வில்வளைக்கும் துணிவு இல்லை விண்கூவ ஏழ்மரத்தை
சல்லரிக்கும் திறனுமில்லை- தந்தைக்காக
வெல்லலில்லா இராச்சியத்தை விட்டுவிட்டு மக்களினைப்
புல்லரிக்க வைத்தடவி புகுவதற்கு விருப்பம் இல்லை!

ஈர்ப்புக் குணம் எதுவுமில்லை இடர்தாங்கும் இதயமில்லை
சூர்ப்பனகை கேட்டுவரின் துரத்திவிடும் மனதுமில்லை
நேர்த்திறத்து ஐhனகியும் நினைவினிலே இருப்பதில்லை
போர்க்களத்தில் ஊராண்மை புரிவதுவா, அதுவுமில்லை!

வால்வளர்ந்த குரங்குகளை வாகான தம்பிகளாய்
கோல் கொடுத்தாட்சி கொடுத்ததுவா? இல்லையில்லை!
நூல்பலவும் படித்தெழுந்த நுண்மையினைக் கண்டதில்லை
சால்புடையதெதுவுமில்லை, தன்மானங் கூடவில்லை!

இத்தனையும் பெற்றிருந்தும் இட்டமுடன் இட்டிருன்னும்
அத்தனையும் சேர்ப்பதுடன் அறுசுவையின் பலவகையும்
மெத்தமெத்த உண்பதற்கு மினக்கெட்ட தன்மையினால்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சாப்பாட்டில் ராமன்தான்!

வாயுபுத்திரன்

தேன் நிலவு!

வேலின் விழி ஒளியில்- முகம்
காலும் மதி வெளியில்
கோல மயில் அவளைக்- கண்டு
கூடி மகிழ்வு கொண்டேன்

சீல வழி அதனில்-பேசும்
செல்ல மொழி இனிப்பில்
பாலும் வழி முகத்தில் - அருள்
பார்த்து மகிழ்வடைந்தேன்

வெள்ளைச் சிரிப்பினிலே – முகம்
வெட்கும் அழகினிலே
துள்ளும் இடையழகில்- மனம்
தூங்க மறந்து நின்றேன்

கொல்லும் பிரிவினிலே – பின்னர்
கூடும் குழைவினிலே
செல்லும் நடையழகில் - பல
சேதிகள் கண்டுகொண்டேன்!

கி.குருபரன்

இது நகுதற் பொருட்டன்று!
மூச்சுவிடக் காற்றுப்பெற
முகத்தை நீட்ட வேண்டும்
மூடிவைத்த ஐன்னலை நீர்
முழுக்கத் திறக்க வேண்டும்
பேச்சு மூச்சு ஏதுமின்றிப்
பிசகி வண்டி நின்றால்
பிராண வாயு பெறவே கையைப்
பிசைந்து நிற்க வேண்டும்

தெப்பலாக நனைந்த சட்டை
தேகம் மீது ஒட்டும்
தேர்ந்தெடுத்;த வியர்வை வாசம்
தேசம் எங்கும் வீசும்
அப்பு ஆச்சி சீற்றிருந்து
அவஸ்தைப்படவே நாங்கள்
அடைத்து நெருக்கி ஏறிந்ற்க
அடக்க பவனி தொடரும்!

செக்கிங் பொயின்றில் ஏறிஇறங்க
செருப்பு பிய்ந்து போகும்!
தெறிகள் அறுந்து கசங்கிச் சேட்டு
சினத்தை ஊட்டலாகும்
மொக்கு வேலை பெரிய பஸ்ஸை
முந்த ஓடி வளைவில்
முழுகும் வேகம் பெற்ற பின்பு
முறுக்கித் திருப்பலாகும்!!

பெண்கள் கூட்டம் பின்னால் நிற்கும்
பெடியள் வானின் டிறைவர்
பிரேக்கை நன்றாய் போடும்பொழுதைப்
பெறவே பார்த்து அலைவர்
கண்கள் சிர்த்து கதைத்துப் பேசல்
காண என்று அல்ல
களவாய் மேலில் இடிக்க நினைப்போர்
கதையை என்ன சொல்ல??!

கி. குருபரன்

Saturday, 10 May 2008

நல்லூர் திருவிழா

நல்லூரில் கொடியேற்றம் நமக்கெல்லாம் கொண்டாட்டம்
எல்லோரும் குதூகலிக்க எம் மனது பூ பூக்கும்

கோவிலுக்கு போகவென கூத்தடிக்கும் தம்பியினை
வாவென்று கூப்பிட்டு வசைபாடிக் குளிப்பாட்டி
தோய்த்தெடுத்த உடுப்புப் போட்டு துணி மீது சென்ட் பூசி
ஆக்கினைகள் இல்லாது அவசரத்தில் வெளிக்கிடுத்தும்

அக்காக்கு சேலை கட்ட அரை மணியும் போதாது
இக்கால பேஷன் எல்லாம் இவளிடம் தான் சரணடையும்
கருக்கழியா சீலையினை கடவுளுக்கு காட்ட என
விருப்பத்தில் கட்டுகிறா வேண்டாம் ஏன் வீண் சண்டை ?!

மச்சாளும் வருவா என மனம் சொல்ல , அண்ணன் இங்கு
பட்சமுடன் தலை இழுக்கும் படிமுறைக்கு அளவு இல்லை
வேளைக்கே கோவிலுக்கு வேகமுடன் போகவென -அதி
காலையிலே எழுந்திருந்து கடகடப்பு செய்கின்றான்

பக்தர்களின் பிரதட்டை பாவையரின் அடியழிப்பு
இத்தனைக்கும் மத்தியிலே எழில் முருகன் ஏன் வந்தான்
சித்தமதில் இனிமையினை சேர்க்கின்ற பஜனையிலே
அத்தனையும் கொள்ளை இடும் அருள் வெள்ளம் அவன் உள்ளம்

பூசை ஓர் அழகு , பூவெறிதல் ஓர் அழகு
ஆசையுடன் பாடி வரும் அடியவர்கள் ஓர் அழகு
வாசலிலே வேலன் நீ வந்துவிடல் ஓர் அழகு
பேச ஒரு வார்த்தை இல்லை , பேதையிடம் கண் திரும்பு !

வெண் மணலில் இருந்து மன வேதனைகள் தீர்ந்த மன
திண்மையினை வேண்டியருள் தேடுகிறோம் உன்னிடமே
கண்மணியை போன்றவனே காதலனே இப்புவியில்
தன்னலங்கள் அகன்றுவிட தந்தருள்க நின் அருளே

வாயிலே சொல்வதொன்று வாழ்க்கையிலே செய்வதொன்று
தீயிலே இவரை இட்டு தீர்த்திடுக தீமைகளை
நோயபிடித்து உழலுகிறோம் நோக்கிஎம்மை காப்பதற்கு
கோயிலிலே எழுந்தருளி குறு நகையில் அருள் வழங்கு !

சஞ்சீவி யாழ்ப்பாணம் 1999

Thursday, 8 May 2008

இப்படியும் ஒருத்தி !

சுற்றி வந்து பார்ப்பாள்
துள்ளித்தான் நடை பயில்வாள்
பற்றிப் பிடிக்க வரின் தாயை
முட்ட விடுவாள் முறுவலிப்பாள்
எட்டி நின்றுகொண்டு வேலிப்
பொட்டுக்கால் தலை புகுவாள்

வால் கிளப்பி ஓடிடுவாள் பல
வளவெல்லாம் வலம் வருவாள்
பால் குடித்த வாய் துடைக்க
பாவிப்பாள் என் சரத்தை

ஏய் கழுதை என்ன இது என
ஏசினால் முகம் திருப்பி
அன்பே எனக் கத்தி என்
ஆத்திரத்தை தீர்த்து வைப்பாள்

கொஞ்சடி என்று சொல்லி - மடி
கொடுத்து நான் ஏற்றி வைக்க
எஞ்சிய உடுப்பை எல்லாம்
ஈரத்தில் தோய வைப்பாள்

குழப்படிக்கு ஓர் அளவு இல்லை
கூத்துக்கும் ஓர் குறைவு இல்லை
அவள்
உழக்கிய செடிகள் யாவும்
உணர்வுடன் சிலிர்த்து நிற்கும்

கழுத்து மணி ஒலிக்க பசுக்
கன்றொன்று வீட்டினிலே
இருப்பது போல் இணை இல்லாத
இன்பங்கள் எங்கே உண்டு?

சஞ்சீவி யாழ்ப்பாணம்.Wednesday, 30 April 2008

இரவல் கனவு

நீல ஒளியின் விழிகள்

நிலவை பகைக்கும் வதனம்

காலில் கொஞ்சும் சலங்கை

கையில் காப்பு விளங்க

தேனாய் சொட்டும் குரலில்

தேகம் சிலிர்க்க வைக்க

மானாய் துள்ளி அவளும்

மறைவை விட்டு வந்தாள்

காதில் தோடு தொங்க

கழுத்தால் பொன்னும் மங்க

கோதை மெல்ல வந்து

கோர்த்தாள் கையை நின்று

அசையும் இடையின் அதிர்வில்

அழகு துள்ளி ஆடும்

இசையும் மார்பின் இடையில்

இதயம் சுரங்கள் பாடும்

பார்த்த பொழுது கண்கள்

பறித்துக் கொண்ட பெண்ணின்

ஈர்ப்பால் கொஞ்சம் என்னை

இழந்து விட்டேன் உண்மை !

வெட்டும் பார்வை வீச்சு

விசையால் மனதே போச்சு

சுட்டும் விரலை ஆட்ட

சுழலும் உலகம் மேற்கே

பஞ்சு அடிகள் வைத்து

பாதம் தரையில் முட்டி

வந்தாள் எனவே தேவ

மங்கை இல்லை என்றேன்

கிட்ட நெருங்கி நின்று

கொடுத்தால் முத்தம் ஒன்று

கட்டில் உருண்டு விழுந்தேன்

கனவு கலைந்து போச்சே !

சஞ்சீவி யாழ்ப்பாணம் .

Monday, 21 April 2008

அதிகாரிகள்

ஊர் சனத்திற்கு உதவி செய்யும் ஒன்று

உயிர் கொடுக்கும் தன்மையதும் உண்டு

பேரறிவு படைத்தவரும் உண்டு

பெரும்பாலும் மற்றதெல்லாம் மண்டு


கதிரையினை விட்டு விட்டு எழும்பி

காரியத்திற்கு உதவுவது உண்டு

கதிரை ஒன்று இருப்பதனை மறந்து -வீட்டில்

கட்டிலிலே உருளுவது உண்டுவால் பிடிக்கும் தன்மையது ஒன்று -வீணே

வம்பளந்து களிப்பதுவும் ஒன்று

கால் பிடித்து மேல் இடத்தில்
கழுத்தறுப்பு செய்வதுவும் உண்டுபொறுப்பெடுத்து தலை கொடுப்பார் உண்டு

பொறுமையுடன் வேலை செய்வார் - உண்டு

நெருப்பெடுத்து எரிந்து விழும் ஒன்று -சும்மா

நிற்பவரை திட்டுவதும் உண்டு
காரியத்திற்கு உதவும் அதிகாரி - மக்கள்

கண்களிலே என்றும் உள்ளார் கண்டீர்

வாரியங்கள் யாவிலுமே இன்று

வண்மை உள்ளோர் சேருதலே நன்று

சஞ்சீவி யாழ்ப்பாணம்

கோபம்

வாசலை கடக்கும் போது
வழியிலே இடித்துக் கொண்டேன்
ஊமையாய் உள்ளே காயம்
உள்ளத்தில் சற்று கோபம்
பேசவே வந்த சொற்கள்
பேதமாய் ஆக முன்னர்
வீசலாம் யாரில் என்று
வேகமாய் வெளியில் வந்தேன்

வேலியை பிய்த்து கோழி
மேய்வது எங்கள் சாடி
கோழியாஸ் சின்ன குறோட்டன்
கொத்தியே கிழித்து வைத்தல்
நாளெலாம் நடப்பது உண்மை
நட்புடன் வாழும் அயலின்
சோலியை கிளப்ப வேண்டாம்
சொல்வதற்கு எதுவும் இல்லை

ஆயினும் காலின் வலியை
யாரிலே தீர்த்துக் கொள்ள?
வேகமாய் கற்கள் கொண்டு
வீசினேன் கோழி மீது
பேசவே இயலாசீவன்
பெரும் குரல் எழுப்பக் கண்டு
வாசலை எட்டிப் பார்த்தார் - அடுத்த
வளவிலே வாழும் முகத்தார்.

தொடங்கிய சண்டை வெற்றி
தோல்வியை காணும் சாட்டில்
விடம் என நெஞ்சில் ஏறி
வேதனை ஆச்சு கண்டீர்
குஸ்திகள் கற்ற மகனை
கூப்பிட்ட முகத்தார் - ஆசுப்
பத்திரிக் கட்டில் ஏறி
அடியனைப் படுக்க வைத்தார்!

சஞ்சீவி யாழ்ப்பாணம்

விரத நாள்

மணியத்தார் வீட்டில் நேற்று
மனிசியும் சண்டை போலும்
சனியனே நாயே பேயே எனத்
தாண்டவம் போட்ட பயனாய்
கொழுவலும் தடித்து முற்றி
கோபத்தை நெய்யாய் பற்றி
வழமை போல அன்றி தீரும்
வழியினை மறந்தார் பாரும்

இரவிலே வந்த பிசகோ?
இடையிலே வந்த வசவோ?
கரவிலே வாய்த்த களமோ?
கடையிலே தந்த அரிசி
உரலிலே போடும் பொழுது
உறுதி அக் கல்லும் உடைந்து
கர கர என்று வாயில்
கடிபட வந்த வினையோ ?

சிறியதில் தொடங்கி சண்டை
சினத்தினால் வளர -அந்தப்
பொறி அதில் பற்றி அன்று -அடுப்பு
புகையுமே போச்சு நின்று
அருமைதான் ! மணியம் எங்கள்
அலுவலக மதிய உணவில்
வரவில்லை , என்ன என்றால் -உப
வாசம் நான் என்று சொன்னார் !

சஞ்சீவி யாழ்ப்பாணம்.

Sunday, 20 April 2008

ஒரு குண்டின் எதிரொலி

சத்தத்தை தந்து குண்டு
சந்தியில் வெடித்த தன்று
மொத்தத்தில் எந்தன் நோஞ்சான்
மேனியில் கீறல் இல்லை

இத்தனை கிட்ட வெடித்தும்
என்னிலே காயம் இல்லை
அப்பனே சாமி முருகா - உந்தன்
அருளது என்ன ஐயா

அருகிலே குண்டின் ஒலியும்
அடங்கவே முன்னர் வந்தோர்
வருக நீ என்று சொல்ல
வழியிலே கூடப் போனேன்

தடியோடு நின்ற அம்மான்
தடுத்துமே உள்ளே போகும்
படி நா அசைத்த போது - அங்கு
பார்ப்பார் என ஐ டி என்று

நினைத்தது தப்பாய் போச்சு
நிகழ்த்து வேறு ஆச்சு
நனைத்து காலை சிறுநீர்
நடந்ததை என்ன சொல்வேன் ?

அப்பாவும் அடித்ததில்லை -என்னை
அம்மாவும் உறுக்க வில்லை
தப்புகள் செய்தும் வாத்தி
தண்டனை தந்தது இல்லை

இருபது வயது வந்தும்
எவருமே அடிக்கா குறையை
தவிரவே செய்வம் என்று
தந்தனர் நல்ல பூசை

எங்கேனும் குண்டு வெடித்தால்
இடர்களை தவிர்க்க விரும்பின்
உங்களின் சொந்த வீட்டில்
உள்ளே தான் இருத்தல் நன்று !

17.07.1999

Thursday, 3 April 2008

சுடரொளியில் கவிதைகள்

சுடரொளியில் கவிதைகள்

தலைப்பு ............................................திகதி

 1. இறுதி தீர்மானம் ......06.05.2001
 2. இவை எல்லாம் பெண்ணே உன்னாலே .....17.06.2001
 3. என் காத்து பறந்ததடி ......17.09.2001
 4. பனம்பழம் ................05.08 .2002
 5. விழி அசைவுக்கு விடை ....30.08.2002
 6. பாடும் சுதந்திரத்தின் பலன் ........11.11.2002
 7. சொல்லும் முறையோ சொல்லும் .......11.11.2002

ஆவணப்படுத்தல்

ஆவணப்படுத்தல்

கவிதைகளை ஆவணப்படுத்தும் முயற்சி என் நண்பர்களின் ஊக்கத்தால் வந்தது . கவிதை களை சேர்த்து தந்த அனைவர்களுக்கும் நன்றி

உதயனில் எனது கவிதைகள்

தலைப்பு......................................................................... திகதி
 1. மீள் பயணம் ..........................................13.12.1997
 2. என் அன்பிற்குரிய ஆள் ...........................20.12.1997
 3. காணாமல் போனவர்கள் ..........................03.01.1998
 4. இப்படியும் ஒருத்தி ......................................17.01.1998
 5. எதிர் பின்னூட்டல்.........................................24.01.1998
 6. மயக்கம் ........................................................31.01.1998
 7. எயிட்ஸ் ........................................................14.02.1998
 8. முடிவொன்று வேண்டும் முதல் ........21.02.1998
 9. பெண்ணாய் பிறந்திட்டால் ...................07.03.1998
 10. வீழ்ச்சியில் எழுச்சி ...................................25.04.1998
 11. சேவைகள் செய்வதே தேவை ...........02.05.1998
 12. கொயின்ஸ் போன் ...................................09.05.1998
 13. கல்விப் பெண்ணே காத்தருள் செய்வாய் .....................................................16.05.1998
 14. வினோத விரோதம் .................................30.05.1998
 15. அவள் வருவாளா ?..................................06.06.1998
 16. மனதில் ஒரு விருந்து ..............................27.06.1998
 17. காற்றடிக்கும் காலம் ..................................27.06.1998
 18. நடிப்பு சுதேசிகள் .........................................04.07.1998
 19. கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை ........................................04.07.1998
 20. சைக்கிளே வாழ்க்கை துணை .................11.07.1998
 21. அன்பே அன்பை கொல்லாதே..................18.07.1998
 22. வாலிபம்........................................................18.07.1998
 23. டெலிபோன் ....................................................25.07.1998
 24. நல்லூர் திருவிழா ......................................01.08.1998
 25. பெயர் என்ன? ...............................................08.08.1998
 26. ஆயிரம் பேரை கொன்றவன் ................22.08.1998
 27. இரவல் கனவு ..............................................05.09.1998
 28. பூபாளம் பாடும் நேரம் .............................05.09.1998
 29. மீண்டும் தொடங்கும் மிடுக்கு .............12.09.1998
 30. மாமா சொன்ன பாடம் ............................19.09.1998
 31. முடிவல்ல ஆரம்பம் .................................19.09.1998
 32. இடர் கெடுக்க வேண்டுமினி ...............03.10.1998
 33. கண்ணெதிரே தோன்றினாள்.................24.10. 1998
 34. காதலிப்போர் கவனம் .............................24.10.1998
 35. படிப்பும் பிடிப்பும் .......................................31.10.1998
 36. உலக உண்மைகள் ..................................07.11.1998
 37. ஒவ்வாமை ..................................................07.11.1998
 38. தீராத விளையாட்டு ...............................14.11.1998
 39. தேன் நிலவு ................................................14.11.1998
 40. கலையும் கலையும் ..............................21.11.1998
 41. இது நகுதற் பொருட்டன்று.................21.11.1998
 42. தீயினில் எரியாத தீபங்கள் ...............27.11.1998
 43. ஒரு மைய வட்டங்கள் ......................05.12.1998
 44. மொத்தலும் மோதலும் ........................19.12.1998
 45. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?.....26.12.1998
 46. சொல்லாமல் சென்ற செருப்பு...............26.12.1998
 47. புலர்கிற புத்தாண்டில் ..............................01.01.1999
 48. விற்க வேண்டாம் விலைக்கு .............30.01.1999
 49. ஏசுவே எம்மை பாருங்கள் ..................13.02.1999
 50. நல்லதோர் வீணை செய்தே ...............06.03.1999
 51. கண்ணிருந்தும் குருடராய் ..................06.03.1999
 52. காம சூத்திரம் .............................................13.03.1999
 53. எப்பவும் வரலாம் எவர் கண்டார்? ......13.03.1999
 54. வதந்தி ...........................................................20.03.1999
 55. எல்லைகள் கடந்த இன்பம் ..........29.05.1999
 56. பின் கதவால் மட்டும் போ ............05.06.1999
 57. தத்தி தாவுது மனமே .........................12.06.1999
 58. தீ மூட்டும் ஞாபகங்கள் ...................19.06.1999
 59. ஒரு குண்டின் எதிரொலி .................24.07.1999
 60. பிலாக்கொட்டை ...................................31.07.1999
 61. அதிகாரிகள் .............................................07.08.1999
 62. உயிரே .......................................................13.08.1999
 63. மாற்றி எம்மை காத்து விடு ..........19.09.1999
 64. சுதந்திரம் ..................................................13.11.1999
 65. அமுதை பொழியும் நிலவே அருகில் வராததேனோ? .......................................13.11.1999
 66. விரத நாள் .........................................04.12.1999
 67. நாளை உலகம் இல்லை என்றால்....04.12.1999
 68. பேதி ......................................................25.12.1999
 69. நானும் இராமன் தான் ..................25.12.1999
 70. பொங்கட்டும் ......................................12.02.2000
 71. ஒரு மொழி இல்லாமல் மௌனமாகிறேன் ........................................19.02.2000
 72. நாளைக்கு விடியட்டும் .......................19.02.2000
 73. கோபம் .......................................................26.02.2000
 74. தோற்று போனேன் ...............................11.03.2000
 75. புதிர்கள் .......................................................18.03.2000
 76. காமம் கடந்த யோகம் .........................18.03.2000
 77. சமரசம் உலாவும் இடமே ...................25.03.2000
 78. தேத்தண்ணி ...............................................25.03.2000
 79. வருக கவிஞ ..............................................25.03.2000
 80. மதில் உடைந்த கதை ...........................24.08.2003

Friday, 22 February 2008

மாமா சொன்ன பாடம்!

மத்தியான வேளை மாமா
மப்பில் ஏனோ வந்தார் ?
மொத்தமாக மாமி மீது
மொத்தி கூத்து போட்டார் .

சட்டி பானை தாம்பாளங்கள்
தலைக்கு மேலே பறக்கும்
பெட்டை இரண்டும் ஓடி வீடின்
பின் கதவை திறக்கும்

அன்பு பெடியன் அவனை கையால்
அடித்த அடியின் சத்தம்
என்புடைந்து தெறிக்கும் வான
இடி முழக்கம் எட்டும் !

பனையின் பாளை சீவி விட்டு
பருக தந்த கள்ளோ?
இணையில் வேகம் தந்த மென்டிஸ்
இடறுகின்ற சொல்லோ?

ஓடிவந்த மோட்டார் சைக்கிள்
ஒழுங்கை விட்டு விலகி
சாடி வேலி பிய்த்து சென்ற
தன்மை இங்கு கண்டீர்

ஆடி பாடி வந்த மாமா
அரையில் உடுப்பு இல்லை - அவர்
ஆடும்போது அவரின் நினைவு
அவரிடத்தில் இல்லை

தேரில் ஏறும் சாமி கூட
செய்யா இந்த ஆட்டம்
தேறும் மாமா செய்து விட்டு
தெருவில் விழுந்தார் பாட்டம்!

அண்டை வீட்டு சனங்கள் கூடி
அடுத்த சந்தி நின்று
மண்டை பிய்த்து கொண்டார் -இந்த
மனிசன் என்ன என்று

செய்த கூத்தில் மாமா வீட்டில்
சேதம் நிறைய வந்து
பெய்யும் மழையாய் மாமி கண்ணில்
பேதை பாவம் அன்று

சின்ன மச்சாள் தோளில் சாய்ந்து
சொன்னேன் நானும் அன்று
என்ன வந்த போதும் மதுவை
எடுக்கேன் என்னை நம்பு!

Wednesday, 20 February 2008

பத்திரிகையில் இரண்டாவது கவிதை

என் அன்புக்குரிய ஆள்
(சஞ்சீவி 20.12.1997)
சில் என்ற நடை உடையாள் - உயர்
சிந்தனை தெளிவுடையாள்
கொல்கின்ற விழி அதனில் பல
கோலங்கள் காட்டிடுவாள்

அன்பிலே பெரும் கடலாள் - முக
அழகிலே நறும் முகையாள்
பண்பிலே உயர்திடுவாள்- சிறு
கனவையும் பறிதிடுவாள்

இடையிலே சிறுத்திடுவாள் என்
இதயத்தில் இடம் பிடித்தாள் -புழக்
கடையிலே சிரிதிடுவாள் வரும்
கனவையும் பறிதிடுவாள்

குரலிலே அவள் ஒரு யாழ் - அரும்
குணத்திலே அவள் இனிப்பால்
அரவிலே செஷனை போல் என்
அன்பிலே அவள் பெரிய ஆள் !