ஞாயிறு, 31 ஜனவரி, 2010

காற்றடிக்கும் காலம்

வேனில் வந்ததால் வேகங்கொண்டுமே
வீசும் காற்றினைப் பாரடா -உயர்
வானில் நின்றநம் மேகந் தள்ளியே
வாழும் காற்றினைப் பாடடா.

தூசு அள்ளியே வீசி வீட்டினினுள்
தூய்மை தன்னையே மாற்றுது - தெரு
மாசு தள்ளியே கூச்சமின்றியே
கூட்டும் வேலையும் பார்க்குது

வட்டக் குடையினை வளைத்து வைப்பதில்
வல்ல சேட்டையை பாரடா - பெண்கள்
சட்டை தூக்கவே பார்க்குதே அதன்
சாதி ஆண்களோ கூறடா?!

திறந்த ஜன்னலை மூடிவைக்கவே
செய்யும் கூலியை கேட்குமா?
பறந்து கூரையின் தகரம் பிய்த்துமே
பாடு படுத்துதே பார்ப்பமா?

சைக்கிள் ஓடவே தள்ளி வருகுதே
தம்பி காற்றினைப் பாடடா!
தைத்து எதிரெனத் தள்ளி நெஞ்சினை
தாக்கும் காற்றினை பாடடா!

வெக்கை குறைத்து நம் வியர்வை ஆற்றவே
வீசும் காற்றது வாழ்கவே
எட்டு மூலையின் பட்டம் வானிலே
ஏற்றும் காற்றது வாழ்கவே!!

08.06.1998

சஞ்சீவி. பிரசுரம் 27 06 1998

கருத்துகள் இல்லை: