சனி, 30 ஆகஸ்ட், 2008

எயிட்ஸ்

எயிட் என்னும் சொல்லின் பொருளை
எழுதினால் தமிழில் உதவி
வைத்தியத் துறையில் இந்நோய்
வருத்தினால் செய்க உதவி

உடலினால் உதவி செய்யின்
உடன்வரும் இந்நோய் என்று
மடமையில் வாழ்க்கை ஓட்டும்
மாந்தரே எழுக இன்று

நோயது கண்ட பலரை
நொடியிலே ஒதுக்கிவைத்தல்
ஆய்கையில் நோயை கூட்டும்
ஆதலால் வெறுக்க வேண்டாம்

அவசரத் தேவை வந்து – காவி
அவர்தரும்குருதி மூலம்
பவத்திலே இந்நோய் பரவி
பலரினை முடித்த துண்மை!

மனைவியை விட்டு வேறோர்
மாதினை நாடிப் போனால்
குணநலன் கெடுவதோடு- நோய்
குருதியில் சேரக்கூடும்

வயதுகள் கூடிப்போனால் - மனைவி
வழியை நீ மாற்று என்றால்- கணவன்
தவறுகள் செய்யச் செல்வான்- அதைத்
தவிர்த்தலே உனது கடமை.

உடலியல் அறிவில்லாது- தப்பு
உணர்வினால் வழிகள் மாறும்
இளம்பயிர் காக்க என்றும்
எடுத்துச்சொல் உடலின் கூறும்.

ஆணொடு ஆண்கள் சேரல்
அவளொடு பெண்கள் புணரல்- அன்று
தேனென இருத்தல் கூடும்!- ஆனால்
தேவையோ உணர்ந்து பாரும்

தொற்றினால் பலநாட் சென்று- நோய்த்
தோற்றத்தை வெளியில் காட்டும்!
மற்றவை போல அன்றிச் சும்மா
மாறியும் திட்டம் தீட்டும்!

ருசிக்கு நீர் பலதைத் தொட்டால்
துன்பமாய் ஆக்க கூடும்.
பசிக்கென ஒன்றை மட்டும்
பாவித்தால், வைரஸ் திட்டும்!!!

ஒழுக்கமாய் வாழ வேண்டும்- வாழ்வில்
ஒருத்தியைச் சுற்ற வேண்டும்- இதனால்
பழுக்கிற வயதில் கூட – நிதமும்
பரவசம் காண ஏலும்!!

14.02.1998

எதிர்ப் பின்னூட்டல்

பனிபெய்ய மழைகொட்டப்
பசும் புற்கள் தலைகாட்ட
கனியொன்று கதைகொள்ளக்
கரம் பற்றும் மனம் மெல்ல

குடைநிழலே கொதியேற்றக்
கொடுவெய்யில் குளிரேற்றப்
படைகொண்ட விழிகொல்ல
பதைப்போடு இவன் செல்ல

படியென் மதிசொல்ல
படு என்று மனம் சொல்ல
துடி என்று அவள் வெல்ல
துடிக்கின்ற இமைதுள்ள

முகம் மீது நகை செய்யும்
முதலான பழம் கொய்யும்
அகம் மீது அன்பூறும்
அதனாலென் உயிர்வாழும்.

காணாமல் போனவர்கள்

முன்பெல்லாம் இங்கு மீசை முளைக்காத இளம் பெடியள்
கண்பார்க்க முன்னாலே காணாமல் போவார்கள்
தோட்டத்திலே செல்லையர் தோளினிலே வெய்யில் பட
வீட்டிலே அவர் பெட்டை விடுகதையாய் மறைந்துவிடும்

இன்னாற்றை பெட்டை இவனோடை ஓடீற்றாம் என்று
அன்னம்மாக் கிழவியின் வாய் அவல் மெல்லத் தொடங்கிவிடும்
பொன்னையர் சுருட்டடித்து புகைபோக்கிக் கதைசொல்ல
கண்காது வைப்பவர்கள்; கடுகதியில் செயற்படுவர்.

முழுதாக ஒரு வருடம் முடிவடைய குழந்தையுடன்
காணாமல் போனவர்கள் கண்ணெதிரே தென்படுவர்
கழுதைகள் எனத்திட்டிக் கை கழுவி விட்டவரும்
அழகான குழந்தையென அன்புடனே அரவணைப்பர்

இப்போதும் பர இளைஞர் இள வயதில் தொலைந்தார்கள்
எப்போது வருவாரோ என ஏங்கிக் காத்திருக்க
அப்பாவும் அம்மாவும் அழுதபடி வீற்றிருக்க
உப்பாற்று வெளிதனிலே உடலாகக் கிடைப்பார்கள்

காதலனைக் காணாமல் கன்னியவள் தவமிருக்க
மோதலிலே இறந்தவிட்ட மூத்தஒரு தலைவரென
சாவுகளின் பின்னர்கூடச் சரித்திரங்கள் மாற்றப்பட
வேதனையின் விளிம்பினிலே வெம்பிடுவாள் பேதையவள்.

பாண்வாங்க தெருமீது படியிறங்கிச் சென்றவர்கள்
மீன்பிடித்து கடல்மீது மிடி தீர்க்கச் சென்றவர்கள்
கான் கரையில் பெண்களுக்குக் கடுப்பேத்தும் வாலிபரும்
காணாமல் போனார்கள் எக் கடன்தீரச் சென்றார்கள்?

செய்தவனை விட்டுவிட்டு சேர்ந்தவனைச் சிறையடைக்க
செய்த வினை என்னவென்று தெரியாமல் அவன் முழிக்க
கைதுகளும் களவுகளும் காட்சிகளாய் முன்விரிய
பைந்தமிழர் முற்பிறப்பில் பாவந்தான் செய்தாரோ?!

தொலைந்தவரின் முகவரியை தேடுபவர் நாளெல்லாம்
அலைந்ததுவே கண்ட மிச்சம் அது தவிர உருப்படியாய்
காணாமல் போனவரைக் கண்டறியச் சென்றவர்கள்
காணாமல் போவதுதான் கடைசியிலே வரலாறா?

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

நானும் இராமன்தான்!

வில்வளைக்கும் துணிவு இல்லை விண்கூவ ஏழ்மரத்தை
சல்லரிக்கும் திறனுமில்லை- தந்தைக்காக
வெல்லலில்லா இராச்சியத்தை விட்டுவிட்டு மக்களினைப்
புல்லரிக்க வைத்தடவி புகுவதற்கு விருப்பம் இல்லை!

ஈர்ப்புக் குணம் எதுவுமில்லை இடர்தாங்கும் இதயமில்லை
சூர்ப்பனகை கேட்டுவரின் துரத்திவிடும் மனதுமில்லை
நேர்த்திறத்து ஐhனகியும் நினைவினிலே இருப்பதில்லை
போர்க்களத்தில் ஊராண்மை புரிவதுவா, அதுவுமில்லை!

வால்வளர்ந்த குரங்குகளை வாகான தம்பிகளாய்
கோல் கொடுத்தாட்சி கொடுத்ததுவா? இல்லையில்லை!
நூல்பலவும் படித்தெழுந்த நுண்மையினைக் கண்டதில்லை
சால்புடையதெதுவுமில்லை, தன்மானங் கூடவில்லை!

இத்தனையும் பெற்றிருந்தும் இட்டமுடன் இட்டிருன்னும்
அத்தனையும் சேர்ப்பதுடன் அறுசுவையின் பலவகையும்
மெத்தமெத்த உண்பதற்கு மினக்கெட்ட தன்மையினால்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் சாப்பாட்டில் ராமன்தான்!

வாயுபுத்திரன்

தேன் நிலவு!

வேலின் விழி ஒளியில்- முகம்
காலும் மதி வெளியில்
கோல மயில் அவளைக்- கண்டு
கூடி மகிழ்வு கொண்டேன்

சீல வழி அதனில்-பேசும்
செல்ல மொழி இனிப்பில்
பாலும் வழி முகத்தில் - அருள்
பார்த்து மகிழ்வடைந்தேன்

வெள்ளைச் சிரிப்பினிலே – முகம்
வெட்கும் அழகினிலே
துள்ளும் இடையழகில்- மனம்
தூங்க மறந்து நின்றேன்

கொல்லும் பிரிவினிலே – பின்னர்
கூடும் குழைவினிலே
செல்லும் நடையழகில் - பல
சேதிகள் கண்டுகொண்டேன்!

கி.குருபரன்

இது நகுதற் பொருட்டன்று!




மூச்சுவிடக் காற்றுப்பெற
முகத்தை நீட்ட வேண்டும்
மூடிவைத்த ஐன்னலை நீர்
முழுக்கத் திறக்க வேண்டும்
பேச்சு மூச்சு ஏதுமின்றிப்
பிசகி வண்டி நின்றால்
பிராண வாயு பெறவே கையைப்
பிசைந்து நிற்க வேண்டும்

தெப்பலாக நனைந்த சட்டை
தேகம் மீது ஒட்டும்
தேர்ந்தெடுத்;த வியர்வை வாசம்
தேசம் எங்கும் வீசும்
அப்பு ஆச்சி சீற்றிருந்து
அவஸ்தைப்படவே நாங்கள்
அடைத்து நெருக்கி ஏறிந்ற்க
அடக்க பவனி தொடரும்!

செக்கிங் பொயின்றில் ஏறிஇறங்க
செருப்பு பிய்ந்து போகும்!
தெறிகள் அறுந்து கசங்கிச் சேட்டு
சினத்தை ஊட்டலாகும்
மொக்கு வேலை பெரிய பஸ்ஸை
முந்த ஓடி வளைவில்
முழுகும் வேகம் பெற்ற பின்பு
முறுக்கித் திருப்பலாகும்!!

பெண்கள் கூட்டம் பின்னால் நிற்கும்
பெடியள் வானின் டிறைவர்
பிரேக்கை நன்றாய் போடும்பொழுதைப்
பெறவே பார்த்து அலைவர்
கண்கள் சிர்த்து கதைத்துப் பேசல்
காண என்று அல்ல
களவாய் மேலில் இடிக்க நினைப்போர்
கதையை என்ன சொல்ல??!

கி. குருபரன்