சனி, 30 ஆகஸ்ட், 2008

காணாமல் போனவர்கள்

முன்பெல்லாம் இங்கு மீசை முளைக்காத இளம் பெடியள்
கண்பார்க்க முன்னாலே காணாமல் போவார்கள்
தோட்டத்திலே செல்லையர் தோளினிலே வெய்யில் பட
வீட்டிலே அவர் பெட்டை விடுகதையாய் மறைந்துவிடும்

இன்னாற்றை பெட்டை இவனோடை ஓடீற்றாம் என்று
அன்னம்மாக் கிழவியின் வாய் அவல் மெல்லத் தொடங்கிவிடும்
பொன்னையர் சுருட்டடித்து புகைபோக்கிக் கதைசொல்ல
கண்காது வைப்பவர்கள்; கடுகதியில் செயற்படுவர்.

முழுதாக ஒரு வருடம் முடிவடைய குழந்தையுடன்
காணாமல் போனவர்கள் கண்ணெதிரே தென்படுவர்
கழுதைகள் எனத்திட்டிக் கை கழுவி விட்டவரும்
அழகான குழந்தையென அன்புடனே அரவணைப்பர்

இப்போதும் பர இளைஞர் இள வயதில் தொலைந்தார்கள்
எப்போது வருவாரோ என ஏங்கிக் காத்திருக்க
அப்பாவும் அம்மாவும் அழுதபடி வீற்றிருக்க
உப்பாற்று வெளிதனிலே உடலாகக் கிடைப்பார்கள்

காதலனைக் காணாமல் கன்னியவள் தவமிருக்க
மோதலிலே இறந்தவிட்ட மூத்தஒரு தலைவரென
சாவுகளின் பின்னர்கூடச் சரித்திரங்கள் மாற்றப்பட
வேதனையின் விளிம்பினிலே வெம்பிடுவாள் பேதையவள்.

பாண்வாங்க தெருமீது படியிறங்கிச் சென்றவர்கள்
மீன்பிடித்து கடல்மீது மிடி தீர்க்கச் சென்றவர்கள்
கான் கரையில் பெண்களுக்குக் கடுப்பேத்தும் வாலிபரும்
காணாமல் போனார்கள் எக் கடன்தீரச் சென்றார்கள்?

செய்தவனை விட்டுவிட்டு சேர்ந்தவனைச் சிறையடைக்க
செய்த வினை என்னவென்று தெரியாமல் அவன் முழிக்க
கைதுகளும் களவுகளும் காட்சிகளாய் முன்விரிய
பைந்தமிழர் முற்பிறப்பில் பாவந்தான் செய்தாரோ?!

தொலைந்தவரின் முகவரியை தேடுபவர் நாளெல்லாம்
அலைந்ததுவே கண்ட மிச்சம் அது தவிர உருப்படியாய்
காணாமல் போனவரைக் கண்டறியச் சென்றவர்கள்
காணாமல் போவதுதான் கடைசியிலே வரலாறா?

கருத்துகள் இல்லை: