வெள்ளி, 22 பிப்ரவரி, 2008

மாமா சொன்ன பாடம்!

மத்தியான வேளை மாமா
மப்பில் ஏனோ வந்தார் ?
மொத்தமாக மாமி மீது
மொத்தி கூத்து போட்டார் .

சட்டி பானை தாம்பாளங்கள்
தலைக்கு மேலே பறக்கும்
பெட்டை இரண்டும் ஓடி வீடின்
பின் கதவை திறக்கும்

அன்பு பெடியன் அவனை கையால்
அடித்த அடியின் சத்தம்
என்புடைந்து தெறிக்கும் வான
இடி முழக்கம் எட்டும் !

பனையின் பாளை சீவி விட்டு
பருக தந்த கள்ளோ?
இணையில் வேகம் தந்த மென்டிஸ்
இடறுகின்ற சொல்லோ?

ஓடிவந்த மோட்டார் சைக்கிள்
ஒழுங்கை விட்டு விலகி
சாடி வேலி பிய்த்து சென்ற
தன்மை இங்கு கண்டீர்

ஆடி பாடி வந்த மாமா
அரையில் உடுப்பு இல்லை - அவர்
ஆடும்போது அவரின் நினைவு
அவரிடத்தில் இல்லை

தேரில் ஏறும் சாமி கூட
செய்யா இந்த ஆட்டம்
தேறும் மாமா செய்து விட்டு
தெருவில் விழுந்தார் பாட்டம்!

அண்டை வீட்டு சனங்கள் கூடி
அடுத்த சந்தி நின்று
மண்டை பிய்த்து கொண்டார் -இந்த
மனிசன் என்ன என்று

செய்த கூத்தில் மாமா வீட்டில்
சேதம் நிறைய வந்து
பெய்யும் மழையாய் மாமி கண்ணில்
பேதை பாவம் அன்று

சின்ன மச்சாள் தோளில் சாய்ந்து
சொன்னேன் நானும் அன்று
என்ன வந்த போதும் மதுவை
எடுக்கேன் என்னை நம்பு!

1 கருத்து:

பனிப்பொழில் சொன்னது…

Nice poem which is remembering NEIGHBOURHOOD.