சனி, 10 மே, 2008

நல்லூர் திருவிழா

நல்லூரில் கொடியேற்றம் நமக்கெல்லாம் கொண்டாட்டம்
எல்லோரும் குதூகலிக்க எம் மனது பூ பூக்கும்

கோவிலுக்கு போகவென கூத்தடிக்கும் தம்பியினை
வாவென்று கூப்பிட்டு வசைபாடிக் குளிப்பாட்டி
தோய்த்தெடுத்த உடுப்புப் போட்டு துணி மீது சென்ட் பூசி
ஆக்கினைகள் இல்லாது அவசரத்தில் வெளிக்கிடுத்தும்

அக்காக்கு சேலை கட்ட அரை மணியும் போதாது
இக்கால பேஷன் எல்லாம் இவளிடம் தான் சரணடையும்
கருக்கழியா சீலையினை கடவுளுக்கு காட்ட என
விருப்பத்தில் கட்டுகிறா வேண்டாம் ஏன் வீண் சண்டை ?!

மச்சாளும் வருவா என மனம் சொல்ல , அண்ணன் இங்கு
பட்சமுடன் தலை இழுக்கும் படிமுறைக்கு அளவு இல்லை
வேளைக்கே கோவிலுக்கு வேகமுடன் போகவென -அதி
காலையிலே எழுந்திருந்து கடகடப்பு செய்கின்றான்

பக்தர்களின் பிரதட்டை பாவையரின் அடியழிப்பு
இத்தனைக்கும் மத்தியிலே எழில் முருகன் ஏன் வந்தான்
சித்தமதில் இனிமையினை சேர்க்கின்ற பஜனையிலே
அத்தனையும் கொள்ளை இடும் அருள் வெள்ளம் அவன் உள்ளம்

பூசை ஓர் அழகு , பூவெறிதல் ஓர் அழகு
ஆசையுடன் பாடி வரும் அடியவர்கள் ஓர் அழகு
வாசலிலே வேலன் நீ வந்துவிடல் ஓர் அழகு
பேச ஒரு வார்த்தை இல்லை , பேதையிடம் கண் திரும்பு !

வெண் மணலில் இருந்து மன வேதனைகள் தீர்ந்த மன
திண்மையினை வேண்டியருள் தேடுகிறோம் உன்னிடமே
கண்மணியை போன்றவனே காதலனே இப்புவியில்
தன்னலங்கள் அகன்றுவிட தந்தருள்க நின் அருளே

வாயிலே சொல்வதொன்று வாழ்க்கையிலே செய்வதொன்று
தீயிலே இவரை இட்டு தீர்த்திடுக தீமைகளை
நோயபிடித்து உழலுகிறோம் நோக்கிஎம்மை காப்பதற்கு
கோயிலிலே எழுந்தருளி குறு நகையில் அருள் வழங்கு !

சஞ்சீவி யாழ்ப்பாணம் 1999

கருத்துகள் இல்லை: