வியாழன், 8 மே, 2008

இப்படியும் ஒருத்தி !

சுற்றி வந்து பார்ப்பாள்
துள்ளித்தான் நடை பயில்வாள்
பற்றிப் பிடிக்க வரின் தாயை
முட்ட விடுவாள் முறுவலிப்பாள்
எட்டி நின்றுகொண்டு வேலிப்
பொட்டுக்கால் தலை புகுவாள்

வால் கிளப்பி ஓடிடுவாள் பல
வளவெல்லாம் வலம் வருவாள்
பால் குடித்த வாய் துடைக்க
பாவிப்பாள் என் சரத்தை

ஏய் கழுதை என்ன இது என
ஏசினால் முகம் திருப்பி
அன்பே எனக் கத்தி என்
ஆத்திரத்தை தீர்த்து வைப்பாள்

கொஞ்சடி என்று சொல்லி - மடி
கொடுத்து நான் ஏற்றி வைக்க
எஞ்சிய உடுப்பை எல்லாம்
ஈரத்தில் தோய வைப்பாள்

குழப்படிக்கு ஓர் அளவு இல்லை
கூத்துக்கும் ஓர் குறைவு இல்லை
அவள்
உழக்கிய செடிகள் யாவும்
உணர்வுடன் சிலிர்த்து நிற்கும்

கழுத்து மணி ஒலிக்க பசுக்
கன்றொன்று வீட்டினிலே
இருப்பது போல் இணை இல்லாத
இன்பங்கள் எங்கே உண்டு?

சஞ்சீவி யாழ்ப்பாணம்.



கருத்துகள் இல்லை: