திங்கள், 21 ஏப்ரல், 2008

விரத நாள்

மணியத்தார் வீட்டில் நேற்று
மனிசியும் சண்டை போலும்
சனியனே நாயே பேயே எனத்
தாண்டவம் போட்ட பயனாய்
கொழுவலும் தடித்து முற்றி
கோபத்தை நெய்யாய் பற்றி
வழமை போல அன்றி தீரும்
வழியினை மறந்தார் பாரும்

இரவிலே வந்த பிசகோ?
இடையிலே வந்த வசவோ?
கரவிலே வாய்த்த களமோ?
கடையிலே தந்த அரிசி
உரலிலே போடும் பொழுது
உறுதி அக் கல்லும் உடைந்து
கர கர என்று வாயில்
கடிபட வந்த வினையோ ?

சிறியதில் தொடங்கி சண்டை
சினத்தினால் வளர -அந்தப்
பொறி அதில் பற்றி அன்று -அடுப்பு
புகையுமே போச்சு நின்று
அருமைதான் ! மணியம் எங்கள்
அலுவலக மதிய உணவில்
வரவில்லை , என்ன என்றால் -உப
வாசம் நான் என்று சொன்னார் !

சஞ்சீவி யாழ்ப்பாணம்.

கருத்துகள் இல்லை: