திங்கள், 21 ஏப்ரல், 2008

கோபம்

வாசலை கடக்கும் போது
வழியிலே இடித்துக் கொண்டேன்
ஊமையாய் உள்ளே காயம்
உள்ளத்தில் சற்று கோபம்
பேசவே வந்த சொற்கள்
பேதமாய் ஆக முன்னர்
வீசலாம் யாரில் என்று
வேகமாய் வெளியில் வந்தேன்

வேலியை பிய்த்து கோழி
மேய்வது எங்கள் சாடி
கோழியாஸ் சின்ன குறோட்டன்
கொத்தியே கிழித்து வைத்தல்
நாளெலாம் நடப்பது உண்மை
நட்புடன் வாழும் அயலின்
சோலியை கிளப்ப வேண்டாம்
சொல்வதற்கு எதுவும் இல்லை

ஆயினும் காலின் வலியை
யாரிலே தீர்த்துக் கொள்ள?
வேகமாய் கற்கள் கொண்டு
வீசினேன் கோழி மீது
பேசவே இயலாசீவன்
பெரும் குரல் எழுப்பக் கண்டு
வாசலை எட்டிப் பார்த்தார் - அடுத்த
வளவிலே வாழும் முகத்தார்.

தொடங்கிய சண்டை வெற்றி
தோல்வியை காணும் சாட்டில்
விடம் என நெஞ்சில் ஏறி
வேதனை ஆச்சு கண்டீர்
குஸ்திகள் கற்ற மகனை
கூப்பிட்ட முகத்தார் - ஆசுப்
பத்திரிக் கட்டில் ஏறி
அடியனைப் படுக்க வைத்தார்!

சஞ்சீவி யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை: